அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலை நிகழ்ச்சியை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக, மங்கைவள்ளி கும்மி குழுவின் 75வது பவளவிழா அரங்கேற்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கும்மியாட்ட நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடினர். அப்போது பேசிய அவர், 2000 ஆண்டுகள் பழமையான இந்த கொங்கு பாரம்பரிய கும்மியாட்ட கலை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற பாடல்பாடி ஆடுவது தான் இதன் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் இந்த கலையை நடத்திவரும் கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்களின் போதும், குடமுழுக்கின்போதும், திருமண நிகழ்ச்சியின் போதும் பெண்கள் ஒன்று கூடி பாடுவது மட்டுமல்லாமல், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கலந்துகொண்டு கிராமிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான கலை ஆகும். நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.

திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற நமது முன்னோர்களின் கனவை நமது சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது இந்த கும்மியாட்ட கலையை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal