தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள்(90) வயது மூப்பு காரணமான பொதுவெளியில் நிகழ்ச்சிகளை தவிர்த்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தயாளு அம்மாளுக்கு திடீரென நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தயாளு அம்மாள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். அத்துடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal