தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து உத்தேசமாக 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். அதனால் அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. இன்று இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 822 இடங்கள் போகிறது. அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 37 இடங்களும் கொடுக்கப்படுகிறது. நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருகிற 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும். அவை எந்தெந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal