சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடி ஏற்றினார். கோரணம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- ‘‘தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், இளம்பெண்களின் திருமணத்திற்கான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அ.தி.மு.க.வின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு முடக்கியதால் ஏழை, எளிய மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீர் மூலம், வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் பாசன திட்டம் 6 ஏரிகளை மட்டுமே நிரப்பிய நிலையில் கைவிடப்பட்டதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நிலை குறித்து அக்கறையில்லாத முதல்வராக செயல்பட்டு வருகிறார். தற்போது டெல்டா பாசன பகுதியில் பெரும் அளவிலான பரப்பில் குறுவை சாகுபடி பணிகள் நடந்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

அணையில் இன்னும் குறுகிய காலத்திற்கான நீர் இருப்பு உள்ள நிலையில், காவேரி பாசன பகுதி விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அண்மையில் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கர்நாடக முதல்வர் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பேசி, உரிய நேரத்தில் காவிரி நீரை பெற்றுத் தர தவறிய நிலையில், அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து வந்த தமிழக முதல்வர், தமிழகம் திரும்பி நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு காவிரி நதி நீர் குறித்து கடிதம் எழுதி இருப்பது, அவர் காவிரி நதிநீர் பிரச்சினையில் கபட நாடகமாடுவதை வெளிச்சமாக்கி உள்ளது.

ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜ.க.வுடன் கூட்டணியிலிருந்த போதும், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதை யாரும் மறக்க முடியாது. இதேபோல் கடந்த 2 ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு பொருட்களின் விலை 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் வெளிமாநிலங்களில் இருந்து தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கூட்டுறவுத் துறையின் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் விநியோகம் செய்யப்பட்டதால் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தற்போது விஷம் போல் உயர்ந்து வரும் விலைவாசியினை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த முன்னாள் நிதி அமைச்சரின் ஆடியோ உரையாடலே அம்பலப்படுத்தி உள்ள நிலையில், ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய தி.மு.க. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், குடும்ப அரசியல் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வினரை பார்த்து அடிமைப்பட்டு கிடப்பதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால் நானோ, அ.தி.மு.க.வோ எவருக்கும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை. மாறாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பதற்காக பல இடங்களில் அடிமைப்பட்டு கிடக்கின்றனர்’’ இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளாளபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ‘‘அ.தி.மு.க.வையும் என்னையும் கலங்கப்படுத்திடும் நோக்கில், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தினை சுட்டிக்காட்டி பேசி வருகிறார். அது குறித்து அவரிடம் நான் சட்டமன்றத்திலேயே விவாதத்திற்கு அழைத்தேன், கொடநாட்டில் நடைபெற்ற நிகழ்வு, மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று, அதில் ஈடுபட்டவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கொடும் குற்றவாளிகள். அவ்வழக்கில் அப்போதைய அ.தி.மு.க. அரசு உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர்களுக்கு ஜாமீன் வழங்கியதும், அவர்களுக்காக வாதாடியதும் தி.மு.க.வினர் என்பதை அனைவரும் அறிவார்கள். அதேபோல் என் மீது கலங்கம் சுமத்தும் வகையில், தி.மு.க.வினரால் தொடரப்பட்ட ஊழல் வழக்கிற்கும் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இனி இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து தி.மு.க.வினர் எங்களை பயமுறுத்த முடியாது’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal