சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 5.1.2024-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி இன்று 21.07.2023 முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, இப்பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal