சமீபகாலமாகவே அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ‘ஜாக்பாட்’ அடித்து வருகிறது. அதே சமயம் ராஜ கண்ணப்பனுக்கு தொடர்ந்து ‘கல்தா’ கொடுக்கப்பட்டுவருவதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை மாவட்ட திமுகவிலிருந்து நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அண்ணா அறிவாலயத்துக்கு பஞ்சாயத்துகள் வந்த வண்ணம் இருந்ததால் தான் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்ததாக காரணம் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தவர் ராஜகண்ணப்பன். இந்நிலையில் நெல்லையில் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், கிரகாம்பெல், சபாநாயகர் அப்பாவு, ஆவுடையப்பன் என பல கோஷ்டிகள் எதிரும் புதிருமாக உட்கட்சி அரசியல் செய்து வருகின்றன.

இதனை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பேசி தீர்வு காண்பார் என தலைமை எதிர்பார்த்த நிலையில் நெல்லை மாவட்ட திமுக உட்கட்சி பிரச்சனை காட்டுத்தீ போல் மேலும் மேலும் பரவத் தொடங்கியது. இதனால் தான் இனியும் ராஜகண்ணப்பனை நம்பினால் வேலைக்கு ஆகாது எனக் கருதிய திமுக தலைமை, மாவட்ட பொறுப்பு அமைச்சராக அவருக்கு பதில் தங்கம் தென்னரசுவை நியமித்துள்ளது.

தங்கம் தென்னரசுவை பொறுத்தவரை ராஜகண்ணபனை விட ஜூனியர் தான் என்றாலும் அரசியல் நெளிவு சுளிவு தெரிந்தவர். யாரிடம் எப்படி பேச வேண்டும் எந்த கோஷ்டியை எப்படி டீல் செய்ய வேண்டும் என்ற வித்தையை கற்றவர். அதனால் தான் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு இத்தனை நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தவர். அவர் இப்போது நெல்லைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக யாரையும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal