கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த அம்மாநில உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தனது கருத்துக்களை கேட்காமல் வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என புகார்தாரரான புர்னேஷ் மோடியும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். புர்னேஷ் மோடியின் கேவியட் மனுவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆஜரானார்.
வழக்கு விசாரணையின் போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை விடுத்தார். ஆனால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகிறது. அவரது வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிக்கை கூடிய விரைவில் வரவுள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு கூடிய விரைவில் விசாரிக்குமாறு அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தி மனு மீது பதிலளிக்குமாறு எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். எதிர்தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கோரினார். ஆனால், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவு 100 பக்கங்களுக்கு மேல் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதில், பதிலளிக்க என்ன அவசியம் உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டத்தின் சில முன்மொழிவுகளை பதிவு செய்ய விரும்புவதாக மகேஷ் ஜெத்மலானி கூறினார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி அவதூறு வழக்கில் அவரது மனு மீது பதிலளிக்க எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.