விருதுநகரில் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக இங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் ஓமியோபதி கல்லூரி மத்திய அரசு அங்கீகாரத்துடன் இயங்குவதாக வந்த விளம்பரங்களை பார்த்து எங்கள் பிள்ளைகளை அந்த கல்லூரியில் சேர்த்தோம். ஆனால் அந்த கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாத நிலை உள்ளது. கல்லூரி சேர்க்கையின்போது தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு அறையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே அறையில் தங்க வைக்கின்றனர். கல்லூரியில் 5 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.
குளியலறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் மாணவிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை எனவும் மாணவிகள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதாகவும், அதனால் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். மாணவிகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவிகளின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.