இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 26 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாமகவின் ஏகே மூர்த்தி, த.மா.கா.வின் ஜிகே வாசன் மற்றும் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உட்பட 38 கட்சிகளின் பிரதிநிதிகள் நாடெங்கிலும் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்துள்ளனர்.
இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்க வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்து, பல தடைகளை கடந்த ஒரு வெற்றிக்கூட்டணி. தேசிய வளர்ச்சிக்கும் மாநிலங்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் உருவானது நமது கூட்டணி,” என குறிப்பிட்டுள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்த சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.