தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலாக 10 ரூபாய் தராவிட்டால் மதுபாட்டில் தர முடியாது என்று சில கடைக்காரர்கள் கூறும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் 10 ரூபாய் அதிகம் வாங்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு இப்போது அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் தமிழ்நாடு மாநில வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து பொறுப்பு அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப் பணியாளர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மேற்காணும் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாங்களும் பொறுப்பேற்க நேரிடும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal