அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துவார்கள் என எச்.ராஜா வெளியிட்ட பட்டியல்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பல்லாயிர கோடி ரூபாய்க்கு கிராவல் மண்களை எடுத்து வித்த குற்றவாளி பொன்முடி என விமர்சித்தவர், ஆடி 1ம் தேதி நேற்று அமலாக்கத்துறையின் ஸ்பெசல் ஆஃபர் சோதனை நடந்துள்ளதாக கூறினார்.

செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து அடுத்து கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற சோதனையில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறினார்.

அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அப்போது தெரிவித்தார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்காமல் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள சென்றுள்ளதாக விமர்சித்தார்.

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லையென்றும் தெரிவித்தார். தக்காளி விலை அதிகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறைக்கலாம் எனவும் எச்.ராஜா யோசனை தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal