அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக செந்தில் பாலாஜிக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பு தேவைப்படும்.
இதன் காரணமாக புழல் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 & 2016 ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் நடந்த ஊழல் சம்பந்தமாக அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை. அமலாக்கத்துறையின் கைது காரணமாக அமைச்சர் பதவியையும் இழந்தார் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறையின் முதல் விக்கெட் அமைச்சர் செந்தில் பாலாஜி!
இந்த நிலையில்தான் கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சி காலத்தில், கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்தான் அமைச்சர் பொன்முடி. பின்னர் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக ஆட்சியை பிடித்தது. அந்த நேரத்தில், அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரியில் மண் எடுக்க அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசுக்கு 28 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டில் பொன்முடி மீதும், அவரது மகன் கௌதம் சிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை நேற்று அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல லட்சங்களையும், வெளிநாட்டு கரன்சிகளையும் கைப்பற்றிது. இந்த நிலையில்தான் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது. அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையின் இரண்டாவது விக்கெட் என்றே கூறலாம். அடுத்த என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
கடந்த 2001& -2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார் அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மகன்கள் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி செல்வம் அடுத்த விசாரணை (நாளை) ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 80% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமலாக்க துறையின் மனு மீது வருகிற நாளை 19ம் தேதி அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவை தெரிவிக்க உள்ளார்.
அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ள விபரம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அமலாக்கத்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் மூன்றாவது விக்கெட் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்!
தி.மு.க.வில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுவதால், அறிவாலயம் அதிர்ச்சியில் இருக்கிறது.