அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. ”வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரையில் நடைபெற உள்ளது. கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்று, கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு நான் பணியாற்றி வருகிறேன்.

பல்வேறு மாவட்டங்களுக்கு கழகப் பணிகள் நிமித்தமாக நான் செல்லும் போது, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது. இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவில் பணியாற்றி வரும் அனைத்து கழக நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், அதேபோல், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறேன்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal