நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியல் கட்சிகளுக்கு அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. காரணம், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. பிற மாநிலங்களில் ‘உடைக்கும்’ வேலையில் இறங்கியிருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே கலக்கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக அரசு. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து திமுக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது. இவ்வளவு தூரம் நடந்துவிட்ட நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளாராம்.

தமிழக முதல்வராக பதவியேற்றது முதலே அவ்வப்போது அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள், கட்சி செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் கேட்டுப் பெறுவார் ஸ்டாலின். எந்தெந்த துறைகள் சுணக்கம் ஏற்படுவதாக தெரிகிறதோ அவர்களுக்கு உடனடியாக சில உத்தரவுகளும் சென்றுள்ளன. தற்போது அமைச்சர்கள், கட்சிப் பிரதிநிதிகள் யாரேனும் அதிருப்தியில் இருக்கிறார்களா, யாருடனாவது டெல்லி மேலிடம் பேச்சுவார்த்தையில் உள்ளதா, கட்சி நிர்வாகிகள் யாரும் பாஜகவில் இருப்பவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களா என்பது குறுத்தும் கவனிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதற்கிடையே உள்ளாட்சி பிரதிநிதிகள் ‘சம்பாதிக்க முடியவில்லையே?’ என மன சோர்வுடன் இருப்பதை உளவுத்துறை மோப்பம் பிடித்து தி.மு.க. தலைமைக்கு சொல்லியிருக்கிறது.

இந்த நிலையில்தான், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. பேரூராட்சித் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால், தொண்டர்கள் சோர்வுடன்தான் இருக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal