கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இருந்த போதிலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்த பாடில்லை. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். விலை உயர்வு காரணமாக சமையலில் தக்காளியின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி தினசரி விற்பனைக்கு வருகிறது. தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி மற்றும் காய்கறிகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உற்பத்தியாகும் தக்காளியை வெளிமாநிலங்களில் இருந்து குவிந்து வரும் வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வழக்கமாக தினசரி 65 லாரிகள் என்ற அளவுக்கு குவிந்து வரும் தக்காளி தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே வருகிறது. இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ், சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளன. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.170-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.220-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் திடீரென ஒரு கிலோ ரூ.100-க்கு எகிறிய பச்சை மிளகாய் இன்று விலை குறைந்து ரூ.70-க்கு விற்பனையானது.