நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர். தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு குறிப்பாக ஜவுளி, முட்டை, இரும்பு தளவாடங்கள், சிமெண்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கெமிக்கல், ஜவ்வரிசி, வெல்லம் தேங்காய், காய்கறிகள் உள்பட பல் வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன .
இதே போல வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு ஆப்பிள் மற்றும் ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைத்து வருகிறது. சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேஷ் உட்பட வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. மேலும் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லாரி தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, பட்டாசு, இரும்பு தளவாடங்கள், கெமிக்கல், கல்மாவு, ஜவ்வரிசி, தேங்காய், வெல்லம், மஞ்சள், அரிசி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் ஆயிரம் கோடிக்கும் மேலான பொருட்கள் தேங்கியுள்ளன. ஏற்கனவே காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது டிரைவர், கிளீனர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.