பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.விலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விலும் இணைவதுதான் வழக்கம். இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

பாஜக மாநில தலைமை மீது அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி லோகநாதன் கடும் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இந்த இணைப்பு படலம் நடந்துள்ளது. பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், ‘வாருங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கழகம் காப்போம்’ என பதிவு வெளியிட்டுள்ளார்.

‘என் மக்கள் என் நாடு’ என்ற முழக்கத்துடன் இம்மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில் அக்கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்திருப்பது பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

திமுகவில் இணைந்துள்ள லோகநாதன், இன்னும் பலரை பாஜகவிலிருந்து திமுகவுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்த அக்கட்சியின் தலைமை அதற்கு முட்டுக்கட்டை போடும் பணிகளை தொடங்கியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷின் செல்வாக்கை பொறுத்தவரை திருச்சி தெற்கு மாவட்டத்தை கடந்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

இதனால் தான் அமைச்சர் நேரு முன்னிலையில் திமுகவில் இணையாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் லோகநாதன் உட்பட பாஜகவினர் திமுகவில் இணைந்துள்ளனர். இதேபோல் அமமுக, அதிமுகவிலிருந்தும் சில முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் அன்பில் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal