கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு திடீர் பதற்றம் ஏன் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்!

ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘‘ஒன்றரை கோடி தொண்டர்கள் உயிரிலும், உதிரத்திலும் சுமக்கிற புரட்சித்தலைவி அம்மா வசித்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நிகழ்த்தி அதன் தொடர்ச்சியாக ஆறு அப்பாவி உயிர்களை பரலோகம் அனுப்பிய பாதகர்களை, இந்த கொடுஞ் செயலை திட்டமிட்டு நடத்திய கொடூரனை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்திருக்கிறார்.

இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பில் எங்கும் எடப்பாடி என்கிற பெயரை குறிப்பிடாத நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு பதற்றம் ஏன்?

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் றீசொல்லாத எடப்பாடி பெயரை வரிக்கு வரி குறிப்பிட்டு எடப்பாடி வகையறாவுக்கு குளிர் காய்ச்சல் வருவது எதற்காக?

கொடநாட்டில் சம்பவம் நடந்து ஆறு ஆண்டு காலம் நகர்ந்து விட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி ஒரே ஒருநாளாவது இந்த இரண்டரை வருடத்தில் கொடநாடு குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று ஒருவரி வாசகத்தை சட்டமன்றத்தில் பேசியது உண்டா? இல்லை பொதுவெளியில் தான் பேசியது உண்டா?

மவுனத்தின் பின்னணியில் மர்மம் இருக்கிறது என மக்கள் சந்தேகிக்கும் நிலையில், இப்போது ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்ட அறிவிப்பு வந்த வினாடியில் இருந்து பதினோரு மணி பாடகர் ஜெயக்குமார் மைக் டைசனாகி குதிப்பது ஏன்? கொந்தளிப்பது ஏன்?

எவ்வளவு ஆழத்தில் போய் நீருக்கு அடியில் விட்டு விட்டு வந்தாலும் அது தண்ணீருக்கு மேல் வந்து தான் தீரும் என்பார்கள். இதனை எடப்பாடி தரப்பின் பதற்றமே உறுதிபடுத்துகிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal