மத்திய அமைச்சரவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இது தொடர்பாக அவர் பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சில மந்திரிகளை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சில மந்திரிகளுக்கு மாநில பொறுப்புகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. மேலும் சில மந்திரிகளுக்கு பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ளன. அந்த வகையில் சுமார் 10 மத்திய மந்திரிகள் அமைச்சரவையில் இருந்து கட்சி பணிக்கு செல்வார்கள் என்று தெரிகிறது. நிதி, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு, உள்துறை ஆகிய இலாகா மந்திரிகள் மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணை மந்திரிகளில் பலர் மாற்றப்பட உள்ளனர். அவர்களுக்கு பதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மந்திரி சபையில் இடம்பெற உள்ளன. அதுபோல பீகாரில் செல்வாக்குமிக்க சிரக் பஸ்வான் மத்திய மந்திரி சபையில் சேர சம்மதித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேல் மத்திய மந்திரியாக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. மத்திய மந்திரி சபை மாற்றம் கடந்த வாரம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததால் அது தள்ளிப்போனது. இந்த நிலையில் மத்திய மந்திரி சபை நாளை (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட இருப்பது தெரியவந்து உள்ளது.
பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது மத்திய மந்திரி சபை மாற்றம் பற்றி பேசியதாக தெரியவந்துள்ளது.