அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்பது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அமலாக்க இயக்குநரகத்தின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், மிஸ்ரா ஜூலை 31, 2023 வரை எஸ்.கே. மிஸ்ரா அந்த பதவியில் நீடிக்கலாம் எனவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

1984ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருவாய்த்துறை அதிகாரியான எஸ்.கே.மிஸ்ராவை 2018ஆம் ஆண்டு முதல் அமலாக்கதுதறை இயக்குநர் பதவியில் இருக்கிறார். முதலில் அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஜூலை 31ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிகிறது. ஆனால், அதற்குள் மத்திய அரசு அவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பிரசாந்த பூஷன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில்தான் இன்று உச்ச நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு இந்த நவம்பரில் எஸ்.கே. மிஸ்ரா பணி ஓய்வு பெறுவார் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த அதிகாரி எந்த மாநிலத்தின் டிஜிபியும் அல்ல, ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி. அவர் பதவிக்காலத்தில் இந்த நீதிமன்றம் தலையிடக் கூடாது. நவம்பர் முதல் அவர் அந்தப் பதவியில் இருக்கமாட்டார்.” என்று கூறினார்.

நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மதிப்பாய்வு நடைபெற்று வருவதால் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நிதி நடவடிக்கை பணிக்குழு என்பது பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதிக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பாகும். இது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு ஆகும்.

“பணமோசடி தொடர்பான சில முக்கியமான விசாரணைகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் தேசத்தின் நலனுக்காக அவரது பதவியை நீட்டிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.” என்றும் துஷார் மேத்தா கூறினார். இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் எஸ்.கே. மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் அவர் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே பதவியில் இருக்கலாம் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஓய்வுபெறும் வயதை அடைந்த பிறகு அமலாக்க இயக்குநராக பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி நீட்டிப்பு குறுகிய காலத்திற்கு இருக்க வேண்டும் என்றும், மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் 2021ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal