அ.தி.மு.க. மாஜி எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக ஆய்வு செய்தார். இந்த விவகாரம் தி.மு.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடம் கலந்துரையாடவும் செய்தார். தமிழகம் முழுவதும் 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் தொகுதி வாரியாக அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 48 தொகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தனது ஆய்வு பயணத்தை முடித்துள்ளார். இன்னும் 186 தொகுதிகளில் அவர் ஆய்வு செய்யவுள்ள நிலையில் அதனையும் வரும் நாட்களில் வரிசையாக முடிக்கவுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்த முதல் பெருமையை அன்பில் மகேஷ் விரைவில் தட்டிச் செல்லவுள்ளார்.

இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த எந்த அமைச்சரும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத் திட்டத்தை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோவையில் இன்று மேற்கொண்ட ஆய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

”பள்ளிகளின் அடிப்படை கட்டுமானமும், மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் களத்தில் இறங்கி அவர்களுடன் உரையாட வேண்டும். களத்தில் செயலாற்ற வேண்டும். அதற்காகவே தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் நோக்கத்தோடு 234/77 ஆய்வுப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது.

அத்திட்டத்தின் கீழ் 48 ஆவது தொகுதியாக எஸ்.பி.வேலுமணி அவர்களின் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உரையாடி, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். நம் பள்ளி நம் பெருமை.முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு இதுபோன்ற கள ஆய்வு மேற்கொள்வது தான் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அந்த வகையில் அமைச்சர்கள் அதிகளவில் கள ஆய்வு நடத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்’’ என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் யாரும் இப்படி நேரடியாக கள ஆய்வில் இறங்கியது முதன் முறை என்ற பெருமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தட்டிச் சென்றிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal