கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி கொள்கிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கான காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ?
அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறாரா?.


எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜனதாவிற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதற்காக முதல்வருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார்.

உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.


பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சினைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார். தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும்.

தமிழக கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. அவர், மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார். இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது. ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா.

கவர்னரைப் பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள். மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்து செய்தி குறிப்பாக வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளியாகி வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் உங்களுக்கு வந்திருக்கிறதா. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal