அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற முயற்சித்த செந்தில் பாலாஜி கைதாகியிருக்கிறார். அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை.

செந்தில் பாலாஜியின் கைது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக முக்குலத்தோர் வாங்குகளை குறிவைக்கும் விதமாக மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான தேதியையும் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ஏற்கனவே டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு இருக்கும் சசிகலா, கொங்கு மண்டலத்தை குறிவைத்துக் காய் நகர்த்தியிருப்பதுதான் எடப்பாடிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. செந்தில் பாலாஜி ‘உள்ளே’ போயும், எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடியை கொடுக்க ஆயத்தமாகிவிட்டார் சசிகலா!

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சசிகலா பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் தனது புரட்சிப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய ஜெயலலிதா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.

வருகின்ற 15.-07-.2023 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவு சென்றடைந்து, மாலை 4.00 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா கவுந்தம்பாடி நான்கு ரோடு கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர் திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மறுநாள் 16.-07-.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பேரூந்து நிலையிலிருந்து 4.00 புரட்சிப்பயணத்தை தொடங்கும் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பேரூந்து நிலையம் அருகிலும் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.

கழகப் பொதுச்செயலாளர் சசிகலா மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொங்கு மண்டலத்தில் சசிகலாவின் இந்த திடீர் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சசிகலாவின் கொங்கு ஆபரேஷனின் பின்னணியில் ‘மேலிடம்’ இருக்கிறதோ என்ற சந்தேகம் எடப்பாடி தரப்பிற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal