‘ஆட்சியே கலைத்தாலும் பரவாயில்லை’ என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார்!
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்துத்துவா செயல் திட்டத்தினை மக்களை புரிந்துகொள்ள வேண்டும். பெங்களூருவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் பங்கேற்கிறேன். விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு நன்றி.
குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது. குடியரசு தலைவர் எதிர்வினையாற்றுவார் என நினைக்கிறேன். குடியரசு தலைவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியலமைப்பு கடமைகளை செய்ய தவறி சனாதன அரசியலை பேசுகிறார். திமுக அரசுக்கு நெருக்கடி தருவது நோக்கம். பெரியார், அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறுக்கிறார். வள்ளலார் சனாதன உச்ச நட்சத்திரம் என்று கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றபடும் தீர்மானங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கபடவில்லை. சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இவை அனைத்தும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அவர் நடந்துகொண்டதற்கான சான்றுகள். முதல்வர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்பது சனாதன எதிர்ப்பை காட்டுகிறது. முதல்வரின் இந்த கூற்று வரவேற்கதக்கது.
அவரது கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது. காவல்துறையினர் 24 மணிநேரமும் பணி செய்கின்றனர். சங்கம் அமைக்க உரிமையில்லை. அவர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி படுத்த வேண்டும். காவல்துறைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை அளிக்க வேண்டும். டி.ஐஜி விஜயகுமார் மரணம் மிகுந்த துயரத்தை தருகிறது. தற்கொலை தீர்வல்ல. உயரதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாபவர்களுக்கு ஆலோசனை வழங்கி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினார்.