2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அதற்கு முன்னர் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அக்கட்சி இறங்கியுள்ளது. அந்த வகையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் 8 பேர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 10 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாஜகவின் தேசிய செயற்குழுவானது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்திவாய்ந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் சமீபத்திய நியமனங்களின்படி, அக்கட்சியின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவர் பாண்டி சஞ்சய் குமார், ஆந்திர மாநில முன்னாள் தலைவர் சோமு வீர்ராஜூ, ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைவர் தீபக் பிரகாஷ், சதீஷ் புனியா (ராஜஸ்தான்), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பீகார்), அஸ்வனி சர்மா (பஞ்சாப்), சுரேஷ் காஷ்யப் (ஹிமாச்சலப்பிரதேசம்) ஆகிய 8 பேர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தரம்லால் கவுசிக் மற்றும் ராஜஸ்தான் தலைவர் கிரோடி லால் மீனா ஆகியோரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனுபவமிக்க தலைவர்களைக் கொண்ட பாஜகவின் தேசிய செயற்குழுவானது கட்சியின் கொள்கை சார்ந்த மற்றும் உயர்மட்ட முடிவை எடுக்கும் அமைப்பாகும். பாஜக தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களை தவிர, ஐந்து தலைவர்கள், ஐந்து பொதுச் செயலாளர்கள், ஒரு பொதுச் செயலாளர் (அமைப்பு) ஆகியோரும் உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal