மகளிர் உரிமைத் தொகைப் பற்றி அண்ணாமலை பேச அருகதை இல்லை என உதயநிதி உக்கிரமாக பேசியிருப்பதுதான் உடன் பிறப்புக்களையே வியக்க வைத்திருக்கிறது.

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசு சார்பாக 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதை இலவசமாக பார்க்காமல் கற்ற கல்விக்கு உரிமையாக பார்க்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்வியை மட்டும் தான் யாராலும் எடுத்துகொள்ள முடியாது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் உங்களை பார்த்து கொள்ள தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனவே வேறு எங்கும் கவனம் செலுத்தாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ‘‘பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வருடம் தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதனை துவக்கி வைத்துள்ளேன். கவர்னர் கடிதம் தொடர்பான விஷயத்தை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார்’’ என்றார்.

மகளிர் உரிமை திட்டம் 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு, ‘‘ பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவேன் என்று சொன்னார்களே 15 ரூபாயாவது கொடுத்தார்களா? அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச அருகதை இல்லை’’ என குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் மாணவ மாணவியர் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal