மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. இதுவரை 37 பேர் கலவரத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு இத்தேர்தல் நடத்தப்பட்டது. வேட்பாளர்களாக சுமார் 2 லட்சம் பேர் களமிறங்கி இருந்தனர்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவைகளையும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி பாடம் புகட்ட துடித்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியது முதலே கலவரங்கள், வன்முறைகள், மரணங்கள் இயல்பான ஒன்றாகிவிட்டன. உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற போது வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தை எட்டின.வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், தீவைத்தல் என வன்முறைகள் தாண்டவமாடின. இத்தகைய வன்முறைகளில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று 18 பேர் பலியாகினர். இதுவரை மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீதுதான் குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளில் திரிணாமுல் தொண்டர்கள்தான் சுமார் 20 பேர் பலியாகி இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளால் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal