தமிழகம் முழுவதும் சமீபத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் ‘உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்று செந்தில் குமார் எம்.பி., ஓபனாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தென்காசி வடக்கு மாவட்டத்திலும் ‘கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்ற குமுறல்கள் அதிகமாகியிருக்கின்றன!
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகம் முழுவதும் ஒரு சில எதிர்ப்புகள் கிளம்கியிருக்கிறது. அதாவது உழைத்தவர்களுக்கும், கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும் பதவி கிடைக்கவில்லை என்று! இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின், ‘தி.மு.க. இளைஞரணியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்’ என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குதான் தென்காசி வடக்கு மாவட்ட உடன் பிறப்புக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். அதாவது, ‘கட்சிகாக உழைக்காதவர்களுக்கு பதவி கிடைக்காதபோது, நாங்கள் மட்டும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக வலைதளங்களில் தென்காசி வடக்கு மாவட்ட உடன் பிறப்புக்கள், ‘‘நீங்கள் கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களை பதவி போட்டிருந்தால் நாங்கள் சோர்வடையாமல் இருந்திருப்போம். பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள் இன்று அமைப்பார்கள், துணை அமைப்பாளர்கள்.
அதனால்தான் வருத்தம், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கொடுத்த பட்டியல் அப்படி! இதில் கடந்த ஐந்தாண்டில் மாவட்ட அமைப்பாளர் எத்தனை போராட்டத்திற்கு வந்துள்ளார். துணை அமைப்பாளர் எத்தனை போராட்டத்திற்கு வந்துள்ளார்? சரி, இவர்களுக்கெல்லாம் எத்தனை உறுப்பினர் கார்டு உள்ளது?’’ எனக் கேட்டு கொந்தளித்துள்ளனர்.
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்று நோக்காமல், உழைக்காதவர்களுக்கு பதவி கொடுத்துவிட்டார் என்ற குமுறல்கள் தென்காசி வடக்கு மாவட்டத்தில் அதிகமாக கேட்கிறது..!