செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப் பட்டிருக்கிறார்!
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறினர். இதனால் இவ்வழக்கில் 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இவ்வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.வி.கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.