ம.தி.மு.க.வின் முக்கியத் ‘தலை’ ஒருவர் சமீபத்தில்தான் வைகோ மீது அதிருப்தி தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில்தான் ம.தி.மு.க. மா.செ.வை வைகோ அதிரடியாக நீக்கியிருப்பது, ம.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக இருப்பவர் சீர்காழியை சேர்ந்த மார்க்கோனி. இவர் கட்சியின் மாநில இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புக்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து மாவட்ட செயலாளரானார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மார்கோனி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக வைகோ அறிவிப்பை வெளியிட்டார். மார்க்கோனியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது அக்கட்சியில் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டது தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மார்கோணி தாயார் சீர்காழி நகராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். நகராட்சி தலைவர் பதவி திமுக வசம் உள்ளது. நகராட்சியின் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கையில், அதிமுகவில் 5 கவுன்சிலர்கள் உள்ளனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மார்கோனியின் தாயார் ஆதரவாளர்களாக உள்ளனர்.
அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன், தன் தாயாரை நகராட்சி தலைவராக்க மார்கோனி திட்டமிட்டுள்ளார். இதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த வைகோ அதிமுகவில் மார்கோனி இணைவதற்கு முன்னதாக அவரை கட்சியில் இருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தலைவர் பதவியை தக்க வைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.