சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.. இதைத்தவிர, அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படித்தான் நேற்றைய தினமும், தலைமை செயலகத்தில் முத்தான முத்திரை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பிறகு, சாலை மற்றும் பால பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

இதற்கு பிறகு அதாவது, நேற்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. எனவே, மதியம் 3 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வயிறு சிகிச்சை நிபுணர் டாக்டர் பழனிசாமி, பரிசோதனை செய்து முதல் கட்ட சிகிச்சையையும் தந்தார். டாக்டர் பழனிசாமிதான், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, வயிறு உபாதை காரணமாக, மருத்துவமனைக்கு செல்லும்போது சிகிச்சை அளித்தவர் ஆவார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘‘முதல்வர் ஸ்டாலின் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகள் நிறைவுக்கு பின்பு நாளை (ஜூலை 4) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’என்று அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்நிலையில், உடல் சோர்வு மற்றும் வழக்கமான பரிசோதனை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையின் படியே, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal