பல்லடம் அருகே ஒரு தனியார் செல்போன் கடை உள்ளது.. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தங்களது முயற்சியைக் கைவிட்டு திரும்பி நடந்து வந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த அவிநாசிபாளையம் ரோந்து போலீஸ் தயாளன் என்பவர் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் யார்? எந்த ஊர்? என விசாரித்துள்ளார். அவர்கள் தாங்கள் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், செங்கல் இறக்குவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசுக்கு மேலும் சந்தேகம் வலுக்கவே அவர்கள் இருவரையும் தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்த தகவல் நேற்று காலை அவினாசிபாளையம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் அவர்கள் இருவரும் பிடிபட்டனர். அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த ஹரி நாயக் (வயது 20), பிருந்தா நாயக் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தக்க சமயத்தில் போலீஸ் சமயோசிதமாக செயல்பட்டு போட்டோ எடுத்து வைத்திருந்ததால் மேற்கொண்டு அவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமயோசிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் தயாளனை பல்லடம் துணை காவல் கண் கண்காணிப்பாளர் சவுமியா, போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.