மாமன்னன் படத்தின் வடிவேலு கதாபாத்திரம், முன்னாள் சபாநாயகர் தனபால் உடன் ஒத்துப்போவதாக பலரும் கூறி வரும் நிலையில், ‘‘இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி, இந்தப் படத்தை எடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி’’ என முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி திமிறி எழுந்து எப்படி உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் கதை, மாமன்னன் படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து, முன்னாள் சபாநாயகர் ப.தனபாலை நினைவு படுத்துகிறது இந்த காட்சி என்று, அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மாமன்னன் படத்தை அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை அதிமுகவினர் பெருமையாகப் பகிர காரணம் இதுதான்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2012ஆம் ஆண்டு தனபாலை சட்டமன்ற சபாநாயகராக நியமித்தார். சிறு வயதில் இருந்தே பல்வேறு போராட்டங்களுக்கு பின், அரசியலில் படிப்படியாக முன்னேறி, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ப.தனபால். தொடர்ந்து 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அவருக்கு பதவி வழங்கினார் ஜெயலலிதா.

தொடர்ந்து, 2011ல் ராசிபுரம் (மாமன்னனில் காசியாபுரம்) தொகுதியிலும் 2016 மற்றும் 2021ல் அவிநாசி தொகுதியிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார் தனபால். தொடர்ந்து வென்று எம்.எல்.ஏவாக இருந்தவர், அமைச்சராக இருந்தவர் என்றாலும், தனபால் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கட்சி நிர்வாகிகளே மரியாதை அளிப்பதில்லை என்ற பேச்சு இருந்தது.

இதையடுத்தே, 2012ல் ஒரு மகத்தான காரியத்தைச் செய்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்ற போது, அதிமுக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக அருந்ததியர் சமூதாயத்தை சேர்ந்த ப. தனபாலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். சபாநாயகருக்கான தேர்தலில் வெற்றி பெற்று, பதவியையும் வகித்தார் தனபால்.

சாதி ரீதியான ஒடுக்குமுறையைக் கடந்து சபாநாயகர் அரியாசனத்தில் தனபால் அமர்ந்தார். சபாநாயகர் என்பதால், சட்டசபையின் அத்தனை உறுப்பினர்களும் வணங்கி மரியாதை செலுத்தும் இடத்தைப் பெற்றார் தனபால். சுமார் 9 ஆண்டு காலம் சபாநாயகராக தனபால் தொடர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனபாலை சட்டசபையின் மாமன்னனாக அமர வைத்து அழகு பார்த்த சம்பவம் ‘மாமன்னன்’ படத்தின் காட்சியுடன் ஒத்துப்போவதால் தான் அதிமுகவினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “நேற்று முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘மாமன்னன்’ படம் பற்றி பேசி வருகின்றனர். 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். எனது விசுவாசத்திற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்புகளை வழங்கினார். ‘மாமன்னன்’ படம் என் கதையின் சாயலில் இருக்கிறது என்றால் அதை ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். அதற்காக படத்தை எடுத்து அதில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. இனிமேல்தான் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார் தனபால்.

இதற்கிடையே அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வலைதளப் பேட்டியில், ‘‘சமூக நீதியைப் பற்றி பேசுபவர்கள் தங்களது கட்சியில் அதை செயல்படுத்துவதில்லை. ஆனால், முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டிற்கு ஜெயலலிதா சென்றபோது, ‘எனது வீட்டில் சாப்பிட கூட கட்சி நிர்வாகிகள் தயங்குகிறார்கள்’ என்று ஜெயலலிதாவிடம் கூறினாராம். உடனடியாக அடுத்த நாளே, அனைவருக்கும் உணவை கொடுக்கக்கூடிய, ‘உணவுத்துறை அமைச்சராக்கினார் அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அ.தி.மு.க.வில்தான் கடைக்கோடி தொண்டனும் உச்சத்திற்கு வரமுடியும். தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர யாரும் வர முடியாது. அப்படியிருக்கும் போது சமூக நீதி எங்கே இருக்கிறது’’ என்று பேசினார்.

‘மாமன்னன்’ படம் அ.தி.மு.க.வினரை மகிழ்ச்சியிலும், தி.மு.க.வினரை திகைப்பிலும்தான் ஆழ்த்தியிருக்கிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal