பா.ஜனதா கட்சி 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவு செய்ததையடுத்து சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து கூறி பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி ஈரோடு அடுத்த சோலார் புதிய பஸ் நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்குகிறார். சரஸ்வதி எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பேசுகின்றனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சோலாரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் வாகனம் நிறுத்துவதற்கு தனி இடவசதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கழிப்பறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.