‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்பார்கள். அந்த வகையில் உறவுகளை இழந்த ஒரு மாணவிக்கு, அவர் மேற்படிப்பிற்கு அடுத்த நொடியே ‘ஆன் தி ஸ்பார்ட்டில்’ உதவியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கடந்த 25ஆம் தேதி அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். அதில் உடையாபட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரும் ஒருவர். இவரது தாய் தந்தை ஏற்கனவே மரணமடைந்து விட்ட நிலையில் ஐயப்பனும் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இதனால் அவரது ஒரே தங்கையான லலிதா ஆதரவற்ற நிலையில் நிற்கதி நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே அரசு வழங்கிய ரூ.2 லட்சம் நிவாரணத்தை பெறுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற லலிதா, அமைச்சர் நேருவிடம் தனது நிலையை விளக்கிக் கூறினார்.

இதையடுத்து பதறிப்போன அமைச்சர் நேரு, என்ன உதவி வேணும், என்னம்மா படிக்க விரும்புறீங்க என அக்கறையோடு அந்த மாணவியிடம் கேட்டார். பி.டெக் டேட்டா சயின்ஸ் படிக்க விரும்புவதாக அந்த மாணவி சொன்னது, அடுத்த நொடியே தனது உதவியாளரிடம் நம்ம காலேஜ்ல இந்த கோர்ஸ் இருக்குதான்னு கேளுப்பா என உடனடியாக கட்டளையிட்டார்.

திருச்சி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி அமைச்சர் நேருவின் தம்பி மறைந்த ராமஜெயத்துக்கு சொந்தமானது. இதனிடையே நம்ம காலேஜ்லே இந்த மாணவி கேட்கும் கோர்ஸ் இல்லைண்ணே என அவர் உதவியாளர் கூற, அடுத்த நொடியே வேறு எங்குப்பா இருக்கு கேட்டு, நாளைக்கே இந்த மாணவியை சேர்ந்து விடுங்க என தனது இளகிய மனதை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சேர்ந்துக்கம்மா, சமயபுரம் காலேஜ்ல சேர்ந்தால் தினமும் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு பக்கமாக இருக்கும் எனக் கூறி அந்த மாணவியை வழியனுப்பி வைத்தார் அமைச்சர் நேரு. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதை போல் ஆன் தி ஸ்பாட்டிலேயே உதவிக்கரம் நீட்டி கல்வியை கொடையாக வழ்ங்கியுள்ளார் அமைச்சர் நேரு.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal