தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றியம் தங்கம்மாள்புரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்குளம், கொம்புக்காரன்புலியூர், ஆத்தங்கரைப்பட்டி, கண்டமனூர், பாலூத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

                      வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஒன்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

                        அ.தி.மு.க. தொடர்பாக வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி கருத்து கூற இயலாது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. எனவே அந்த படத்தை பார்த்தபிறகுதான் கருத்து கூற முடியும். பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்துவதால் எந்தவித பலனும் இல்லை.                  

இதேபோல கடந்த காலங்களிலும் எதிர்கட்சிகள் பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த கட்சியினர் பின்னர் கலைந்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது என்பதைப்போலத்தான் இவர்கள் கூட்டம் நடத்துவதும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal