சென்னையில் மாநகராட்சி ஒப்பந்ததாரை மிரட்டி பணம் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் இ.எம்.இ என்ற நிறுவனம் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் பெற்று பணி செய்து வருகின்றனர். இதற்காக அனகாபுத்தூர் பக்தவச்சலம் பகுதி வழியாக அடிக்கடி லாரிகள் மணல் ஜல்லி போன்றவை எடுத்து சென்றுள்ளன. தொடர்ச்சியாக லாரிகள் அவ்வழியாக செல்வதைப் பார்த்த அப்பகுதியின் நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் தமிழ் குமரன், அந்த லாரிகளை மடக்கியுள்ளார்.

மேலும், அவ்வழியாக செல்வதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டம் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன் என்பவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ் குமரறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைச்சர் தலையிட்டும் நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது!

ஆளும்கட்சி திமுகவாக இருந்தாலும், அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் திமுக கட்சி தலைமை ஏற்கனவே தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆட்சி பொறுப்பேற்றது முதலே கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். முதலில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதுடன், காவல்துறை புகாரின் அடிப்படையில் கைதும் செய்யப்பட்டார்.

இதேபோல், திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் அவரிடமும் விளக்கம் கேட்டு தலைமைக் கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில் திமுகவினர் அடுத்தடுத்து இதுபோன்ற புகார்களில் சிக்குவது கட்சி தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal