திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தளவில் அமைச்சரின் பெயரைச் சொல்லி சில ஒன்றியச் செயலாளர்கள் கனிம வளங்களை முறைகேடாக கடத்தி வந்தனர். இந்த நிலையில்தான், குவாரியை முறைகேடாக நடத்தியதாக கே.என்.நேருவால், தான் பாதிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய விவகாரம்தான் மலைக்கோட்டையில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பழனியாண்டி. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் சொந்தமாக குவாரி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பழனியாண்டியின் குவாரிக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் அமைச்சர் நேரு உள்ளதாக சந்தேகிக்கும் பழனியாண்டி எம்.எல்.ஏ., நேருவின் அறிவுறுத்தல் படி தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அமைச்சர் நேருவுடன் பழனியாண்டி எம்.எல்.ஏ. மிகவும் இணக்கமாக செல்லக்கூடியவராச்சே, அவர்களுக்குள் என்ன புது பிரச்சனை என விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட திமுகவினர். அண்மையில் கூட திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக நின்றவர் பழனியாண்டி. இதனிடையே பழனியாண்டியின் குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சொந்தக் கட்சிக்காரர்களுக்கு என்றுமே தாம் துரோகம் செய்ய மாட்டேன் எனவும் அமைச்சர் நேரு விளக்கம் கொடுத்த ஆடியோவும் வந்துள்ளது.

அமைச்சர் நேருவை பொறுத்தவரை அவரை திமுகவினர் நாட்டாமை என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். காரணம் தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சிப் பஞ்சாயத்தை கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில் முதன்மைச் செயலாளர் என்கிற முறையில் சுமூகமாக பேசி முடித்து தீர்வு காண வழி வகுப்பார்.

இப்படி ஊருக்கே பஞ்சாயத்து செய்து வரும் அவருக்கு திருச்சியில் புது பஞ்சாயத்து உருவாகியிருக்கிறது. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் இடையேயான பனிப்போர், மேயர்கள் கவுன்சிலர்கள் இடையேயான மோதலால் கட்சித் தலைமைக்கு தான் தலைவலி ஏற்படுகிறது.

உண்மையில் என்னதான் நடந்தது என்ற விசாரணையில் இறங்கினோம்.

‘‘சார், அமைச்சர் கே.என்.நேருவைப் பொறுத்தளவில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சியினருக்கு என்றைக்குமே ‘அமைச்சர்’தான். ‘அமைச்சர் எங்களுக்கு ஆதரவு என்று ஒரு சில ஒன்றியச் செயலாளர்கள் தொடர்ந்து கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் அமைச்சருக்கு யாரும் கொண்டுபோக வில்லை. அப்படியே கொண்டுபோனாலும், ‘முன்விரோதம் காரணமாக இப்படிச் சொல்கிறார்கள்’ என்று சொல்லி கதையை வேறுபக்கம் திருப்பிவிடுவார்கள். உண்மைநிலையை அமைச்சரும் ஆராய்வதில்லை.

இந்த நிலையில்தான் ஸ்ரீரங்கம் தொகுதி எல்.எல்.ஏ. அமைச்சர் கே.என்.நேரு மீது பகீரங்கமாக குற்றச்சாட்டியிருக்கிறார். அமைச்சரும் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டியும் நெருக்கமாம். செந்தில் பாலாஜி மூலமாகமாகத்தான் அய்யர் மலை, தோகை மலை போன்ற இடங்களில் பழனியாண்டி குவாரிகள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் கே.என்.நேருவுக்குச் செல்ல, தன் சமூகத்து மந்திரி மூலமாக பழனியாண்டிக்கு செக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில், பனிப் போர் வெடித்திருப்பது கே.என்.நேருவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal