பிரபல நடிகை திரிஷா விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து விஜய்யுடன் பைரவா, சர்க்கார், விக்ரம் ஜோடியாக சாமி 2, விஷால் உடன் சண்டக் கோழி 2 என தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மகாநடி தான். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

மகாநடி படத்தின் வெற்றிக்கு பின்னர் டிராக்கை மாற்றிய கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது மாமன்னன் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. இப்படத்தில் கம்யூனிஸ்ட் ஆக நடித்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் திமுக-வில் இணைந்து விரைவில் தன்னுடைய அரசியல் பணியை தொடங்குவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. கீர்த்தி உடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ள அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததன் பெயரில் கீர்த்தி அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீர்த்தியின் அரசியல் வருகை குறித்து செய்தி வெளியாவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் மகாநடி படம் வெற்றியடைந்த சமயத்தில் அவருக்கு ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர். அப்போது கீர்த்தி ஆந்திராவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர் பாஜகவின் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. பின்னர் அதெல்லாம் வெறும் வதந்தி எனக்கூறி அவரது தாய் மேனகா முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல் தற்போது அவர் திமுக-வில் இணைய உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மையா, அல்லது வதந்தியா என்பதை அவர் அறிவித்தால் தான் உண்மை தெரியவரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal