

தி.மு.க.வில் உள்ள உடன் பிறப்புக்கள் எதிர்பார்த்த ஒரு செய்தி ஜூலை மாதம் நடக்க இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் அலையடித்துக் கொண்டிருக்கின்றது!
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. மகன் என்றும் பார்க்காமல் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் என்றும் கருதாமல் சில காரணங்களுக்காக அழகிரியை கட்சியைவிட்டு வெளியேற்றினார் கருணாநிதி. இதனால் திமுக செங்குத்து பிளவை எதிர்கொள்ளும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மு.க.அழகிரியோ, திமுகவுக்கு எதிராக பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவுக்குள் நுழைவதற்கு அழகிரி விரும்பினார். கருணாநிதி குடும்பத்தினரும் இதனை எதிர்பார்த்தனர். இதற்காகவே தமது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை நடத்தி, சென்னையில் பேரணி போய் எவ்வளவோ முயன்றார் அழகிரி. ஒரு கட்டத்தில் தனிக் கட்சி, ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி என்றெல்லாம் அரசியலில் வேறு ஒரு திசை நோக்கியும் அழகிரி பயணித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததுதான் தாமதம். தமது ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்தினார் அழகிரி.
2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களின் போதும் அழகிரி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகும். பின்னர் அடங்கிப் போகும். தேர்தல் சமயத்தில் மு.க.அழகிரி குறித்த கேள்விக்கு, ‘எனது அண்ணன்’ என்று பேசினார் மு.க.ஸ்டாலின். என்று சட்டசபை தேர்தலில் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைந்ததும் அத்தனையும் தலைகீழாகின. முதல்வரான தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்ததை முரசொலி வெளியிட்டு மகிழ்ந்தது. மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அழகிரி குடும்பம் பங்கேற்றது. பின்னர் அமைச்சரான உதயநிதி மதுரைக்குப் போய் பெரியப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது பெரியப்பாவும் பெரியம்மாவும் பேரனாந்தத்தில் இருந்தனர். அந்த தருணத்திலும் திமுகவுக்கு எப்போது திரும்புவீர்கள்? என கேட்க, திமுக தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அழகிரி.
இந்நிலையில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதி குடும்பத்தின் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பாக கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. இதனால் அழகிரியும் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என விரும்பினாராம் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அமெரிக்காவில் இருந்த அழகிரியை முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தம்மால் உடனே வர இயலாத நிலையை அழகிரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் கருணாநிதி வீட்டில் ஒரு விசேஷ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம். அன்றைய தினம் அனைத்து சொந்தங்களும் ஒன்று கூடுவார்களாம். பொதுவாக கருணாநிதி குடும்ப நிகழ்ச்சிகளில் கூட அழகிரியும் முதல்வர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தனர்.
ஆனால் ஜூலை மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் நேருக்கு நேராக சந்தித்து பேச உள்ளனராம். அப்போது லோக்சபா தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை இருவரும் ஆலோசிக்கவும் இருக்கின்றனராம். இதனால் கருணாநிதி குடும்பம் இந்த சந்திப்பு நடைபெறும் நாளுக்காக பரபரப்புடன் காத்திருக்கிறது சித்தரஞ்சன் சாலை என்கின்றனர்.
இந்த சந்திப்பின் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள தி.மு.க. கணக்குப் போட்டிருக்கிறது என்கிறார்கள்!
