நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க.வும் அப்படியே வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. ஒன்றிணையுமா என எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அடித்துக் கூறிவருகிறார்.

இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ். ஆதரவாளரும், கழக கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் ‘யார் எட்டப்பன்?’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது ‘யார் எட்டப்பன்?’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கருத்து இதோ…

‘‘ * கூட்டணியை பலப்படுத்தினால் மட்டுமே கோட்டையில் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்னும் அமித்ஷா தொடங்கி அண்ணன் ஓ.பி.எஸ். வரை எடுத்துரைத்த ஆலோசனையை அடம்பிடித்து ஏற்க மறுத்து தி.மு.க.வை திட்டமிட்டே ஆட்சிக்கு வரவழைத்த எட்டப்பன் யார்..?

 • 10.5 சதவீத இடஒதுக்கீடு என்கிற ஏமாற்று வேலையை சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில் அறிவிப்பு செய்து திட்டமிட்டே தென் மாவட்டங்கள் மொத்தத்தையும் தி.மு.க.வுக்கு தாரை வார்த்த எட்டப்பன் யார்?
 • தனது அபகரிப்பு திட்டத்தை எதிர்காலத்தில் ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்காகவே அ.தி.மு.க.வின் வேட்பாளர்களையே தேர்வு செய்து தோற்கடித்த எட்டப்பன் யார்?
 • ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக நிற்பார்கள் என யூகித்து என் போன்ற வேட்பாளர்களுக்கு பாதியளவு பணத்தை மட்டுமே பாரபட்சத்தோடு கொடுத்து வஞ்சகம் செய்து வீழ்த்திய எட்டப்பன் யார்?
 • அ.தி.மு.க. பிளவுற்றால் ஆதாயமடைவது தி.மு.க. தான் என்பதை அறிந்தே கட்சியை பிளந்து கருப்பு சிவப்பு கட்சிக்கு வாய்ப்பு தந்து அதன்மூலம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல் சம்பந்தி மீதான டெண்டர் வரை ஆதாய அறுவடையை தி.மு.க.விடம் இருந்து ரகசியமாய் பெறுகின்ற எட்டப்பன் யார்?
 • ஆளும் தி.மு.க.வின் அவலங்களை மக்கள் மன்றத்தில் நின்று எடுத்துச் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சி அந்தஸ்தை பா.ஜ.க.விடம் பறிகொடுத்து விட்டு திட்டமிட்டே தி.மு.க.வுக்கு தீவட்டி தூக்குகிற எட்டப்பன் யார்?
 • ஒரு ஓட்டில் இருவர் தேர்வு என்று ஊரையும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் ஒருசேர ஏமாற்றி ஒற்றைத் தலைமை என்பது கற்பனை என உத்தமனாய் பேசிவிட்டு அபகரிப்பு அரசியலை முன்னெடுத்த பித்தலாட்ட எட்டப்பன் யார்?
 • கழக நிறுவனர் புரட்சித்தலைவரின்
  சட்ட விதிகளை தனக்கு ஏற்றாற்போல் மாற்றி கடைக்கோடி தொண்டனுக்கு தலைமையை தேர்வு செய்யும் உரிமையை தந்துபோன மக்கள் திலகத்தை அவமதிப்பு செய்யும் ஆக்கிரமிப்பு எட்டப்பன் யார்?
 • தன் ஆயுளில் முப்பத்து மூன்று வருடங்களை ஒப்பில்லாத இந்த இயக்கத்திற்காக ஒப்படைத்துப் போன புரட்சித்தலைவி அம்மாவுக்கு விட்டு வைக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் இருக்கையை புறவழியில் பிக்பாக்கெட் அடித்த போக்கற்ற எட்டப்பன் யார்?
 • தவழ்ந்து தரையில் புரண்டு கூத்தூரில் குத்தகை எடுத்த முதலமைச்சர் பதவியை வைத்து கொரோனா முதல் கொடநாடு வரை கொள்ளையோ கொள்ளை நடத்தி அடித்து குவித்த லஞ்சப் பணத்தை வைத்து அண்ணா தி.மு.க. என்கிற ஒன்றரைகோடி தொண்டர்கள் தங்கள் உதிரத்தால் உருவாக்கிய கட்சியை திட்டமிட்டு திருட அலையும் சிலுவம்பாளையத்து பழனிசாமி தானே? எட்டப்பன்..!

அப்படியிருக்க கழகத்திற்கு உழைத்து இன்று வரை கழகத் தொண்டனின் உரிமை காக்க போராடும் உத்தமர்களை பார்த்து எட்டப்பன் என்று சொல்ல எடப்பாடிக்கு அருகதை உண்டா?

 • தங்கத்தை தரம்பார்த்து சொல்ல உறை கல்லுக்கு உரிமை உண்டே தவிர உம்மைப் போன்ற துருப்பிடித்த தகரத்துக்கு அது கிடையாது என்பதே உண்மை..!’’ என்று முடித்திருக்கிறார் மருது அழகுராஜ்..!

ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் சிந்திக்க வேண்டிய நேரம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal