தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவார். கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு பாராளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்தது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதனால் தலைவர் மாற்றம் பற்றி டெல்லி மேலிடம் பரிசீலிக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகள் ஆவதால் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட 4 மாநில தலைவர்கள் மாற்றம் மற்றும் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் நியமனததை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் புதிய தலைவரை நியமிக்கும் போது கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு இணக்கமாக செல்லக் கூடியவரே நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இப்போது டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதி மணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் உள்பட சிலர் பதவிகளை பெற காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்களில் யாரை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. யாரை பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்காததால்தான் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கே.எஸ்.அழகிரி இன்று மாலை டெல்லி செல்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அழகிரியின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பதவி நீட்டித்தாலும் சரி, புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் சரி 5 செயல் தலைவர்கள், மாநில பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவிகளை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal