தமிழக அரசியல் களத்தில் குறுகிய காலத்தில் உச்சத்திற்கு சென்ற அதே வேகத்தில் சறுக்கி சாதனை படைத்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி! இவருக்கு நேர்ந்த நிலைமைதான் மற்ற அரசியல் வாதிகளை அச்சுறுத்தி வைத்திருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் சில சமரச முயற்சிகள் செய்யப்பட்டாலும் சர்சசைகள் ஓய்ந்தபாடில்லை. சைலண்ட் மோடில் இருந்த வழக்கு திடீரென விஸ்வரூபம் எடுத்து முதலுக்கே மோசமாகும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதிலும் 2011&-2016 காலகட்டத்தில் நடந்த மோசடி விவகாரம் 2021&-2026 காலகட்டத்தில் தூசு தட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் சில அரசியல் காய் நகர்த்தல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தேர்தல் வெற்றிக்கு பக்கா வியூகம் வகுத்து செயல்படுத்தி காட்டுவதில் வல்லவராக செந்தில் பாலாஜி திகழ்கிறார். இதனை 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவற்றில் தெளிவாக பார்க்க முடிந்தது. அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் பங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர திமுக அமைச்சரவையில் அதிகம் ‘டர்ன் ஓவர்’ செய்யும் அமைச்சராக கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் சர்ச்சைகள் எழுந்த போதும் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விட்டு கொடுக்கவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் டெல்லியின் கண்களை உறுத்தி கொண்டே இருந்ததாக தெரிகிறது. பாஜகவிற்கு அக்னி பரீட்சையாக இருக்கும் அடுத்த பெரிய தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கியமாக காரியகர்த்தாக்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க நேரம் பார்த்து வந்தது.

இதற்கிடையேதான் 40 இடங்களில் தொடங்கி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்க முற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், நெஞ்சு வலி, பைபாஸ் அறுவை சிகிசை, 3 அல்லது 4 மாதங்கள் ஓய்வு என விஷயம் வேற மாதிரி திரும்பியுள்ளது. இதனால் டெல்லியின் கணக்கு சற்றே சறுக்கியுள்ளது. இருப்பினும் மற்றொரு துருப்புச் சீட்டை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.

​அது வேறு யாருமில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார். ஒட்டுமொத்த கவனமும் செந்தில் பாலாஜி பக்கம் இருக்கையில் சைலண்ட் மோடில் அசோக் குமார் மீது அமலாக்கத்துறை ஒரு கண் வைத்தது. ரெய்டு முடிந்து நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இவர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

அப்படி பார்த்தால் அசோக் குமார் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்க வாய்ப்பு குறைவு. கடைசியாக ஜூன் 20ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இது சட்ட ரீதியான நகர்வு என்பதால் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக முடியாது. வேறொரு தேதியில் ஆஜராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இவர் ஆஜராகும் போது பல விஷயங்களை வாக்குமூலமாக பெற திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அசோக் குமாரின் கைது நடவடிக்கையை ரகசியமாக வைத்து திமுகவிற்கு செக் வைக்கவும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இவர் மூலம் திமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கி சிக்க வைக்கவும் டெல்லி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி கரூரில் வருமான வரித்துறை அடுத்தகட்ட சோதனையில் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி தற்போதைக்கு ‘வாய் திறக்க’ வாய்ப்பில்லை. அதே சமயம், அவரது சகோதரர் அசோக் வாய் திறந்தாலே, ‘எல்லாமே முடிந்துவிடும்’ என்கிறார்கள் மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர். அதற்குதான் தற்போது ‘ஸ்கெட்ச்’ போட்டு வருகிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal