தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக இன்று மதியம் சில தகவல்களை அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

‘‘தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மித மானமழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்னும் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு மழை தொடரும். ஒரு சில பகுதிகளில் கனமழையாக இருக்கக் கூடும். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில், தென் பகுதியில் இருந்து வடபகுதியை நோக்கி காற்றின் வேகம் கூடி இருக்கிறது. அதன் காரணமாகவே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி அது மெதுவாக நகர்ந்து வருகிறது. மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுகிறது. இது மெதுவாக வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

இதனால் இந்த மழையானது அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களுக்கு தொடரும். மீனம்பாக்கத்தை பொறுத்தவரை பதிவான மழையில் கடந்த 73 ஆண்டுகளில் இது 2-வது அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு 28.2 செ.மீ. பதிவாகி இருக்கிறது. தற்போது 16 செ.மீ. மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரையில் கடந்த 73 ஆண்டுகளில் இது 3-வது அதிகபட்ச மழை. 1996-ம் ஆண்டு 34.7 செ.மீ., 1991-ல் 19.1 செ.மீ. மழை பெய்துள்ளது. தற்போது 8.4 செமீ. மழை பெய்துள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயல்பு அளவு 3.4 செ.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மழை அளவு 3 செ.மீ. ஆகும். இது இயல்பை விட 11 சதவீதம் குறைவாகும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal