திருச்சியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி, முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022–2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது. மேலும், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முதர்தசா மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய உதயநிதி ஸ்டாலின், மாணவ, மாணவியர்களிடம் உரையடினார்.

இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் மாணவர்களுக்காக, தமிழ்நாடு முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டத்தை தான் ஆய்வு செய்வேன். மேலும், ஆய்வின்போது, காலை உணவை பொறுத்தவரை பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். என்ன தான் வீட்டில், வெளியில் சாப்பிட்டாலும், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் எனக்கு மகிழ்ச்சி. மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை, கல்வி முறை பற்றி கேட்டு அறிவேன். குறிப்பாக பள்ளிகளில் காலை உணவு சரியான நேரத்தில் வழங்கபடுகிறதா? ஆசிரியர்கள் சரியான முறையில் கல்வி கற்று தருகிறார்களா என ஆய்வு செய்த பிறகு தான் எனது பணியை தொடங்குவேன்.” என்றார்.

பள்ளிகல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடாமல், கல்வியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் முதல்வர் இருப்பார். அவர்களுக்கான திட்டங்களை இந்த அரசு உறுதியாக இருந்து செயல்படுத்தும். தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எதையும் பற்றி சிந்திக்காமல், கல்வியை மட்டும் கற்க்கவேண்டும். வருங்காலத்தில் நீங்கள் ஒரு ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும். குறிப்பாக இந்தியாவே உங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal