செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார். கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். இந்த நிலையில் 2.15 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகினார்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஜே நிஷா பானு மற்றும் டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும். இன்றே வழக்கை பட்டியலிட முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒரு பக்கம் நடக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வருகிறது. அதன்படி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி சற்று நேரத்திற்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது.

அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று அப்போது நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜியை வைக்க உத்தரவு வாங்க அமலாக்கத்துறை முடிவெடுத்து மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு சென்று விசாரணையை தொடங்கினார். அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்றனர். இதையடுத்து நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.

ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் வைத்துள்ளார். வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளதால் உடனே செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

சில நிமிடங்களுக்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது பைபாஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதனால் ஆட்கொணர்வு வழக்கில் அவரை ஆஜர்படுத்துவது சிக்கலாகி உள்ளது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து 4 மூத்த மருத்துவர்களின் ஆய்வு செய்தனர். சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இஎஸ்ஐ முதல்வரிடம் அறிக்கை வழங்கவுள்ளனர். இவர்கள் அமலாக்கத்துறை மற்றும் நீதிபதி அல்லியிடமும் அறிக்கையை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal