த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் 70 பேர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் புதிய குண்டை தூக்கிப் போட்டிருப்பதுதான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை பேருந்து நிலையம், உள் விளையாட்டு அரங்கம் ஆகிய இரண்டுமே எங்களது ஆட்சியில் கட்டப்பட்டது.
இது எங்களுடைய சாதனைகள். அதைத் தொடர்ந்து வந்த ஆட்சி, அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு சிறப்பு விருது நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். எப்போதும் போல் முதல்வர் விஜய் பேசாமல் சென்றுவிட்டார்.
திமுக, அதிமுகவும் சேர்ந்து தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் தவெக கிளப்பிய வதந்தி. குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள். 1980-ஆம் ஆண்டு எம்ஜிஆரும், கருணாநிதியும் இருந்த போதே பிஜு பட்நாயக், திமுகவையும் அதிமுகவையும் ஒன்று சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அன்று இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், இது ஒத்து வராது என சொல்லிவிட்டனர். எனவே அதிமுகவும் திமுகவும் ஒன்று சேரப் போகிறது என்பது தவெகவினர் கிளப்பிய வதந்தி’’ என்றார்.
நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரகுபதி பதிலளிக்கையில், ‘‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவெக எம்எல்ஏக்கள் அதை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். தவெக எம்எல்ஏக்களில் அதிருப்தியாளர்கள் அதிகம். அவர்களில் ஒரு 60 பேர் ஒன்று சேர்ந்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். அதிருப்தியாளர்கள் 60 முதல் 70 எம்எல்ஏக்கள் இருப்பதாக சொல்கிறார்கள், பார்ப்போம் என்ன நடக்குது என்பதை!’’ இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்களை விலை வாங்கி தவெக குதிரை பேரம் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக ரகுபதி சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டுதான் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுக மூத்த நிர்வாகிகளும், திமுக தலைவர் ஸ்டாலினும் கூறி வந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
