முதல்வர் விஜய் நேற்றைக்கு புதுக்கோட்டை சென்று வந்த நிலையில், இன்றைக்கு சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக, தம்பதியரில் ஒருவர் இந்த வெள்ளிக்கிழமை சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை (ஞிக்ஷிகிசி) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, பணமோசடி உள்பட வழக்குகள் இருப்பதால், நீதிமன்றத்தின் மூலம் தண்டனை ஒருவேளை கிடைத்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, விராலிமலை இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவாரா? விஜய் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal