டாஸ்மாக் புதிய விதிமுறைகளை எதிர்த்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 245 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 1729 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் எச்சரிக்கை… பணியிடை நீக்கம்… என அடுத்தடுத்த நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறைகளுக்கு எதிரான ஊழியர்களின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை என நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
காலி பாட்டில்களை திரும்பப் பெற தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும், பாட்டில்களை சேகரிக்க தனி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் முன்னறிவிப்பின்றி கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடைகளை திறக்காத மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

முதல் நாளில் கடைகளை திறக்காத 960 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 160 பேர் தவிர மற்றவர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், கடைகளை தொடர்ந்து திறக்காத 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத பணியாளர்களில் பலர், 2வது நாளாக நேற்றும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. முதல் நாளில் 160 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் மேலும் 245 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 1729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை வெளிப்படையாகவும் முறையாகவும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படுமா? அல்லது போராட்டம் மேலும் தீவிரமடையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
