தமிழகத்தில் அமைச்சர்கள் 26 இலட்சம் ரூபாய் வரை கார் வாங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் 26 லட்ச ரூபாய் வரை அரசு செலவில் கார் வாங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்களோடு சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோரும் 26 லட்சம் ரூபாய் வரை கார் வாங்கிக் கொள்ளலாம். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலும் கார் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் பயணப்படி விதிகளில் திருத்தம் மேற்கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்முதல் தொடர்பான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு கார் வாங்குவதற்கான உச்சவரம்பு 26 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்குவதற்கான உச்சவரம்பு 15 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமின்றி, வரிகள், வாகனப் பதிவு கட்டணம் மற்றும் மோட்டார் வாகனக் காப்பீட்டுத் தொகையும் அடங்கும். மேலும், இந்த உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
